மீனவன்
ஒரு வேலை உணவுக்கு
ஓராயிரம் தடவைகள் செத்து பிழைக்கிறான் ,
நீலக்கடல் சென்றவன் திரும்பாமல் போனால்
காத்துக்கிடக்கிறது கருப்பு கண்ணீர் அஞ்சலி !
கடல் நீர் முழுவதும்
உப்பால் நிறைந்ததாலா என்னவோ
இவனின் கண்ணீரின் விலை
கடல் அன்னைக்கு தெரியாமல் போய்விட்டது !
அலைகளோடு சேர்ந்தே
ஆட்டம் போடுது இவனது வாழ்க்கையும் ,
உணவு தேடப்போய்
உணவாகிப்போகிறான் இவனும் ஒருநாள் !
முதல் போட்ட கடல் தொழிலாளிக்கு
முடிவு கட்டுகிறது ,
நீலக்கடல் !
ஆயிரம் முறைகள் மூழ்கினாலும்
இவர்கள் கைகளில் முத்துக்கள் கிடைப்பதில்லை !
வலை வீசுபவனுக்கு
வலை வீசுகிறான் எமன் !
எத்தனை வலைகள் வீசினால்
இவர்களுக்கு காட்சி கொடுப்பதில்லை
பாற்கடல் கடவுள் !

Comments
Post a Comment